பொதுவாக உள்நாட்டிலும், உலக அளவிலும் பணக்காரர்கள் வரிசையில் முன்பெல்லாம் பல ஆண்டுகள் மாற்றங்கள் இல்லாமல் இருக்கும். 2020 ம் ஆண்டு உலகை புரட்டிப்போட்ட கொரோனா காலத்திற்கு பின் தொழில் வர்த்தகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
உலக அளவில் முன்னணி பணக்காரர்கள் என்ற வரிசையில், கடந்த 30 ஆண்டுகளாக புருனை சுல்தான், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்சும் இருந்தனர். தற்போது யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்லா நிறுவனத்தலைவர் எலன் மாஸ்க், சில ஆண்டுகளாக உலக அளவில் முன்னணி பணக்காரராக உள்ளார்.
உலக பணக்காரர்கள்
உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 227 பில்லியன் டாலர். அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜாஸ் , 149 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் 4 வது இடம், வார்ரன் பஃபட் 5 வது இடம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 8 வது இடம், அதானி குழுமத்தின் கவுதம் அதானி 9 இடம் மற்றும் மெடா நிறுவனத்தின் மார்ஜ் ஜூக்கர்பெர்க் 13 வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலில் பிர்லா குழுமத்தலைவர், ஜிண்டால் குழுமத்தலைவர், விப்ரோ நிறுவனத்தலைவர் அசிம் பிரேம்ஜியும் கால் நூற்றாண்டுகளாக இருந்தனர். அதன் பிறகு சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருந்து வந்தார். இந்நிலையில் சென்ற பிப்ரவரி மாதம் அதானி குழுமத்தலைவர் கவுதம் அதானி, முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி , இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை அடைந்தார். சில வாரங்களில் அம்பானியும், அதானியும் மிகச்சிறிய வித்தியாசத்தில் பணக்காரர்களாக இருந்தனர்.

சென்ற வாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்தது. பங்குகள் 3 சதவீதம் உயர்வையும் சந்தித்தது. இதனால் இந்திய அளவில் முன்னணி பணக்காரராக முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் நம்பர் ஒன் என்ற இடத்தையும், உலக அளவிலான பட்டியலில் எட்டாவது இடத்தையும் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். பில்லியனர்கள் பட்டியல் ப்ளூம்பர்க் நிறுவனம் வெளியிட்ட, உலக பில்லியனர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.7 பில்லியன் டாலர் என குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலராக உள்ளது, கவுதம் அதானி இந்திய அளவில் இரண்டாவது பணக்காரராகவும், உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் 9 வது இடத்திலும் உள்ளார். உலகின் முன்னணி 10 பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் முகேஷ் அம்பானியும், கவுதம் அம்பானியும் உள்ளனர். இந்த பட்டியலில் மேலும் பல இந்திய நிறுவனங்களின் அதிபர்கள் இணையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
-ரா.தங்கபாண்டியன்







