ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நகரில் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கனிஸ்தான் தற்போது தலிபான்கள் கைவசம் வந்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் காபூலுக்கு கிழக்கே அமைந்துள்ள ஜலாலாபாத்தில் ஏற்றப்பட்ட தலிபான்களின் கொடியினை அப்புறப்படுத்தி ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை அப்பகுதி மக்கள் ஏற்றியுள்ளனர். தலிபான்களின் கொடியை எரித்தும் தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தியினர்.
இதையடுத்து தலிபான்களுக்கும் போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதாகவும், தலிபான்கள் மக்களை விமான நிலையத்தை அடைய விடாமல் தடுக்க முயல்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கான உரிமை பரிக்கப்படுமோ என்ற கவலை எழுந்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு சுதந்திரத்தை பறிக்கக் கூடாது என தலிபான் அரசுக்கு அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பெண்கள் மேம்பாட்டுக்கு தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாகவும் 21 நாடுகளும் உறுதியளித்துள்ளன.







