“வார்னருக்கு எதிரான கேப்டன்ஷிப் தடையை நீக்க ஆலோசனை”

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு எதிராக கேப்டன் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ரத்து செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ம் ஆண்டு தென்…

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு எதிராக கேப்டன் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ரத்து செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சுக்கு உதவும் வகையில் பந்தை சேதப்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் வாழ்நாள் முழுவதும் கேப்டன் பொறுப்பை வகிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் தடை விதித்தது.

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் ஓராண்டு தடை விதித்திருந்தது. ஓராண்டு தடைக் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி தனது அதிரடி ஆட்டத்தை வார்னர் தொடங்கிவிட்டார்.

எனினும், அவர் கேப்டன் பொறுப்பை வகிப்பதற்கான தடை மட்டும் தொடர்ந்து நீடிக்கிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டனாக இருந்தார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை வகித்தார். ஸ்மித்துக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அத்துடன், கேப்டன் பொறுப்பை கூடுதலாக ஓராண்டு வகிக்கவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

2019 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் டேவிட் வார்னர் 600 ரன்களுக்கும் அதிகாக எடுத்திருந்தார். ஆஷஸ் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில், டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட கேப்டன்ஷிப் தடை விரைவில் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.