குஜராத் கலவர வழக்கு விசாரணைக்காக ஆஜரானபோது நரேந்திர மோடி நாடகமாடவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவர வழக்கில் இருந்து நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நரேந்திர மோடியை விடுவித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நேற்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடி, கலவரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்ததை சுட்டிக்காட்டினார்.
அப்போது, பாஜக தொண்டர்கள் யாரும் போராட்டம் நடத்தவோ, தங்கள் ஆதரவை வெளிப்படுத்த வீதிக்கு வரவோ இல்லை என தெரிவித்த அமித் ஷா, அரசியல் சாசனத்திற்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நரேந்திர மோடி நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காகவே, உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு, நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்த விரும்பியதை அறிந்ததும், விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அவரே தெரிவித்தார் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரத்தின் பின்னணியில் அரசியல் இருந்ததாகக் குற்றம் சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் தற்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.










