மரம் சாய்ந்து விபத்து; மாநகராட்சிக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மரம் சாய்ந்து விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கையோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136க்கு…

மரம் சாய்ந்து விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கையோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136க்கு உட்பட்ட லட்சுமணசாமி சாலை, பி.டி ராஜன் சாலை சந்திப்பில் 50 ஆண்டு பழமையான சுமார் 5 அடி விட்டமுள்ள மரம் ஒன்று நேற்று (ஜூலை 25) மாலை சுமார் 6 மணியளவில் சாய்ந்தது.

இம்மரம் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்துள்ளது. இதனால் காரில் பயணித்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க வாணிகபிலன் என்பவர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சென்னை மாநகரின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கேகே நகரில் நேற்று மரம் விழுந்து வங்கி பெண் மேலாளர் வாணி பலியானதற்கு கால்வாய் தோண்டப்படும் பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கேற்றார் போல் பல பகுதிகளில் கால்வாய் தோண்டப்படும் இடங்கள் எவ்வித தடுப்புமின்றி திறந்தே கிடப்பதை பார்க்கமுடிகின்றது.

மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது. இதன் பிறகாவது உரிய முன்னெச்சரிக்கையோடு இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.