போதை பழக்கத்தை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி சில வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது பாராட்டுக்குரியது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிப்பது
குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆலோசனை நடத்தியிருப்பதும், பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருப்பதும் வரவேற்கத்தக்கவை என பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற கனவு நனவாக வேண்டும் என்றால், போதை அரக்கனை ஒழிப்பதற்கான பணிகள் தொய்வடையக் கூடாது; மாறாக நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். புகையிலை, மது மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இதற்காகத் தான் கடந்த 43 ஆண்டுகளாக போராடி வருகிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் குட்கா எனப்படும் போதைப் பாக்குகளை தடை செய்யசட்டம் இயற்றியது; சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் தீமைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது என ஏராளமான முயற்சிகளை தான் மேற்கொண்டேன்.
அதனால், புகையிலைப் பொருட்களின் தீமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கூட, போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. போதைப் பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் தான் கடந்த மே 29-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த போது, போதைப் பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூலை 30-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இத்தகைய சூழலில் போதை ஒழிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியிருப்பது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. ‘‘போதைப் பொருள்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே விற்பனையாகாமல் கண்காணிக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகமானது, தனது எல்லைக்குள் இப்பொருள்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்; காவல் நிர்வாகமானது, போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்; போதைப் பொருள் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும்; அவர்களது மொத்த சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்; மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்’’ என்று இன்றையக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கியிருப்பது சரியானது. ஆனால், இவற்றையும் கடந்து பல நடவடிக்கைகளை எடுத்தால் தான் போதை அரக்கனை ஒழிக்க முடியும்.
போதைப் பொருட்களை ஒழிக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒருபோதும் நான் கூற மாட்டேன். ஆனால், அந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த பயன்களை அளிக்கவில்லை என்பது தான் உண்மை. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கஞ்சா சோதனை நடத்தப்பட்டு, 8000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதற்கு பயன் இருந்திருந்தால் கஞ்சா ஒழிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது கட்டமாக கஞ்சா சோதனை நடத்தப்பட்ட போதும் அதே எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அதே அளவிலான கஞ்சாவும், குட்கா போதைப் பாக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறை நடவடிக்கைகளால் போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு குறையவில்லை என்பதற்கு இதுவே சாட்சியமாகும்.
கஞ்சா உள்ளிட்ட போதை மருந்துகளை விற்பனை செய்பவர்கள் தான் கைது செய்யப்படுகிறார்களே தவிர அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் கைது செய்யப்படவில்லை. இத்தனை ஓட்டைகளை வைத்துக் கொண்டு போதை அரக்கனை ஒழிப்பது சாத்தியமில்லை. போதைப் பொருட்களின் மூலம் எது? என்பதைக் கண்டறிந்து அதை அழிக்க வேண்டும்; போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்; போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மட்டுமின்றி, அவர்களை இயக்குபவர்களின் சொத்துகளும் முடக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
– இரா.நம்பிராஜன்