எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா தரமற்று கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து, அதிமுக நிர்வாகிகளுடன் விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தவறு செய்தவர்களை திருத்தலாம் ஆனால் துரோகிகளை ஒரு போதும் திருத்த முடியாது என்றும் திருத்த முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக, சசிகலா தரமற்று கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய சி.வி. சண்முகம், சசிகலா முன்பு என்ன செய்தார், தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதை நாங்களும் பேச வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் யார் யாரோ எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி பார்க்கிறார்கள் ஆனால் எம்.ஜி.ஆருக்கு சொந்தமானது இரட்டை இலை சின்னம் என்று கூறினார். வீட்டுக்கு வேலை செய்ய வந்தவர்களே வீட்டு முதலாளி ஆக நினைப்பதை பல படங்களில் பார்த்துள்ளோம் என்று விமர்சனம் செய்த அவர், அதிமுக இயக்கத்தினால் உண்டு கொழுத்தவர்கள், காட்டிக் கொடுத்தவரக்ள், இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டு இப்பொழுது இயக்கத்தை அழிக்க கங்கனம் கட்டிக் கொண்டு இருப்பதாகவும் சசிகலாவை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்தார்.







