அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலத்தில், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், பாஜகவிற்கு அடிபணிந்து அதிமுக செயல்படுவதாக திமுகவினர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார். ஆனால் அதிமுக அரசு, பாஜகவிற்கு அடிபணிந்து ஒருபோதும் செயல்படாது என்று பதிலளித்தார். நட்பு என்பதும், ஆதரவு என்பதும் வேறு எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருவதும், ஆட்சியை இழந்த பிறகு கொண்டு வந்த திட்டத்திற்கு, எதிராக போராட்டம் நடத்துவதும் தான் திமுகவின் வழக்கம் எனவும் குற்றஞ்சாட்டினார். ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கனவை நீட் மூலம் கொண்டு வந்து சிதைத்தது காங்கிரஸ்-திமுக கூட்டணிதான் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வை பற்றி பேச திமுகவிற்கு எந்த யோக்கியதையும் இல்லை எனவும், திமுக ஆட்சியில் மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.







