பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் அடிப்படைத் தொண்டர்கள் பற்றி பேசும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கியபோது அடிப்படை தொண்டர்கள் பற்றி பேசாதது ஏன் என உச்சநீதிமன்ற வாதத்தின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக் குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் அரியமாசுந்தரம் வாதங்களை முன்வைத்தார். கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மறுத்து அரியமாசுந்தரம் வாதங்களை எடுத்துரைத்தார். ”1.5 கோடி தொண்டர்கள் மூலம்தான் பொதுச்செயலாளர் தேர்தெடுக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என எதிர் தரப்பு கூறுவதாக இருந்தால் அனைத்து விவகாரங்களிலும் தொண்டர்களிடம்தான் செல்ல வேண்டி இருக்கும். ஆனால் அது மிகவும் சிரமமான காரியம் என்பதால் தான் பொதுக்குழுவிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தான் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் பொதுக்குழுவில் சேர்க்கப்படுகிறார்கள் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கூட அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. விகிதாச்சார அடிப்படையில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருந்தாலும் பிரச்சனை வரும்போது அடிப்படை உறுப்பினர்களிடம்தான் விவகாரத்தை கொண்டு செல்லலாம் என ஓபிஎஸ் தரப்பு கூறுவதும் கவனம் கொள்ளக்கூடியது தானே ? என அப்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு இபிஎஸ் தரப்பில் பதில் அளித்த அவரது வழக்கறிஞர், முன்னதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது என்று விளக்கம் அளித்தார். அந்த பதவிகளை உருவாக்கியபோது எதிர்ப்பு தெரிவிக்காத, தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று சொல்லாத ஓபிஎஸ், தற்போது மட்டும் ஏன் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார் ? என்றும் இபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ஒற்றை தலைமை கோரிக்கை ஏன் எழுந்தது என்பது குறித்தும் இபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே தான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றை தலைமை என முடிவு எடுக்கப்பட்டது
என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
“அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநித்துவம் தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்.எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை அடிப்படை உறுப்பினர்களின் முடிவாகதான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல், பொதுக்குழு எடுத்த முடிவுகளை மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல பொதுக்குழு உறுப்பினர்களால்தான்.” என அதிமுக பொதுக் குழுவின் அதிகாரங்கள் குறித்து பல்வேறு வாதங்களை இபிஎஸ் தரப்பு முன்வைத்தது.
”ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.தகுதி நீக்கம் செய்தது குறித்து சம்மந்தம் இல்லாமல் ஓ.பி.எஸ். தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தன்று ஓ.பி.எஸ். தரப்பு கட்சியின் தலைமை அலுவலகத்தை தாக்கி, உள்ளிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதற்காக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். ஜூலை 11 பொதுக்குழுவில் பங்கேற்ற 2460 உறுப்பினர்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தனர். இது மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 94.5% ஆதரவு ஆகும்.
ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் ஓபிஎஸ் தரப்பில் பங்கேற்றுள்ளனர். ஜூன் 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக செய்யப்பட்ட அறிவிப்பையும் OPS தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது” என ஓபிஎஸ் தரப்பின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து பல்வேறு வாதங்களை இபிஎஸ் தரப்பு முன்வைத்தது.
அ.தி.மு.க.வில் இல்லாத ஒரு விஷயத்தை புதிதாக கொண்டு வரவில்லை, மாறாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை ரத்து செய்துவிட்டு முன்னர் இருந்தது போன்று பொதுச்செயலாளர் பதவி தான் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறிய இபிஎஸ் தரப்பு, அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும் நிலையையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அது தெரியாதா ? எனக் கேள்வி எழுப்பியது. இவை தவிர அமெரிக்க அரசியல் நிகழ்வை அதிமுகவின் அரசியல் நிகழ்வோடு ஒப்பிட்டும் வாதங்களை இபிஎஸ் தரப்பினர் முன்வைத்தனர்.
அமெரிக்காவில், கேப்பிட்டல் ஹில் என்ற அரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் என்ன செய்தார்களோ அதை தான் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் செய்தனர் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து வழக்கு விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







