முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”அந்த விஷயம் மட்டும் நடந்திருந்தால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே தேவைப்பட்டிருக்காது”- ஓபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இரண்டாவது நாளாக இன்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த நிலையில்,  அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்றுமுதல் மீண்டும் நடைபெற்று வருகிறது. நேற்று முன்னாள் முதலமைச்சர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் பரபரப்பான வாதங்களை முன் வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று விசாரணை தொடங்கியபோது முதலில் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு ஆண்டுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் தேவைப்பட்டிருக்காது என அப்போது ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

 ஆனால் அப்போது அதனை செய்யாத எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது புதிய பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த வாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதிமுகவின் அவைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகள் என்னென்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரப்படைத்தவர் அவைத்தலைவர் என ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.  பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதன் மீது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து முடிவு எடுக்கலாம் என்றுதான் அதிமுக சட்டவிதி கூறுகிறது என்றும் ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  ஜெயலலிதா அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என்றும் ஏற்கனவே அதிமுக சட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டதை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ் தரப்பு,  அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செயல்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டியது.

”ஜெயலலலிதா மரணத்துக்கு பின்னர் திருத்தப்பட்ட கட்சி விதிபடி
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதே அதிமுகவின் தலைமை நிர்வாக பதவி,  அந்த பதவிக்கான காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், கட்சியின் எந்த முடிவையும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்” என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

உட்கட்சி தேர்தல் முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  இணைந்து  முடிவு  எடுத்தால் மட்டுமே அது செல்லத்தக்கது எனக் குறிப்பிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்,
கட்சியின் அசையும்,அசையா சொத்துக்கள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்திலும் இந்த இரு பதவியில் இருப்பவர்களும் இணைந்து அதிகாரம் செலுத்தலாம் எனத் தெரிவித்தார்.

“ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவது, அது கட்சியின் அடிப்படை விதியோடு தொடர்புடையது எனவே பொதுக்குழு மூலம் அந்த பதவிகளை ரத்து செய்துவிட்டு, புதிய பதவியை உருவாக்க முடியாது. கட்சி விதிகளில் மாற்றம் செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது.  ஆனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குரியவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய முடியாது என கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வாதங்கள் ஓபிஎஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டன.

முன்பு அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவியாக பொதுச்செயலாளர் பதவி இருந்தததாகவும்,  ஆனால் தற்போது கட்சியில் இல்லாத அந்த பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 10 மாவட்ட செயலாளர்களால் முன் மொழியப்பட வேண்டும், 10 மாவட்ட செயலாளர்களால் வழிமொழிய வேண்டும் என ஜூலை 11ந்தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்,  அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு  எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட ஏதுவாக இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், நாளை அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்ய அறிவுறுத்தினர்.

-எஸ்.இலட்சுமணன் 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி சென்ற 4 பேர் பத்திரமாக திரும்பினர்

EZHILARASAN D

பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு; அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

G SaravanaKumar

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க கோரி தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

Vandhana