நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நவம்பர் 19ஆம் தேதி பிறந்த விவேகானந்தர் சினிமாவில் தன் பெயரை விவேக் என சுருக்கிக்கொண்டு காமெடி நடிகனாக மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தார். அப்துல்கலாமின் சீடராக தன்னை மாற்றிக்கொண்டு தன் பெயரில் உள்ள விவேகானந்தரின் கொள்கைகளையும் பின்பற்றி நாடு முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மக்களின் ஹீரோவாக வாழ்ந்து வந்த நடிகர் விவேக் கடந்த ஆண்டு இதே நாளில் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் மூழ்கடித்தார். அவரின் மறைவுச் செய்தி, பலருக்கும் பேரிடியாக அமைந்தது.
பசுமை நாயகனாகவும், பசுமரத்தாணியை போல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தும், மறைந்த பின்பும் தன் நடிப்பால் மக்களை மகிழ்வித்த நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் விவேக் பசுமை கலாம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு நடிகர் விவேக்கின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகள் நட்டனர். அப்போது, அவர் மறைந்து ஒரு வருடம் ஆயினும் அவர் நட்டுவைத்த பல லட்சம் மரங்கள் வாயிலாக இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதனை அனைவரும் நினைவுகூர்ந்தனர்.
- அ.மாரித்தங்கம், மாணவ ஊடகவியாலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








