அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23ம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.







