திட்டமிட்டபடி 648 கிலோ மீட்டர் உயரத்தில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து ஆதித்யா விண்கலம் பிரிந்தது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், சூரியனை பற்றிய ஆய்வில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, சரியான ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து, ஆதித்யா விண்கலம், தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடையே தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “சரியாக திட்டமிட்டபடி 648 கிலோ மீட்டர் உயரத்தில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆதித்யா விண்கலம். சுமார் 2,298 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து, ஆதித்யா விண்கலமானது தனித்த தனது பயணத்தைத் தொடர்கிறது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம், சரியான பாதையில் செல்கிறது. திட்டமிட்டபடி தனது பயணத்தை மேற்கொண்டுவருகிறது.
இனி, விண்கலன் அதன் பயணத்தை எல்1 புள்ளியில் இருந்து தொடங்கும். இது கிட்டத்தட்ட 125 நாட்கள் மிக நீண்ட பயணம். திட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். ” இவ்வாறு தெரிவித்தார்.