ஆதித்யா விண்கலம் சரியான சுற்று வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது எனவும், திட்டமிட்டபடி புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், விண்கலத்தின் திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரை இறங்கி வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், சூரியனை பற்றிய ஆய்வில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, சரியான ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து, ஆதித்யா விண்கலம், தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடையே தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், விண்கலத்தின் திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி பேசுகையில், ”ஒரு கனவு நனவானது போல் உள்ளது. ஆதித்யா L1 பிஎஸ்எல்வி மூலம் செலுத்தப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆதித்யா L1 அதன் 125 நாட்கள் நீண்ட பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
ஆதித்யா L1 திட்டத்தில் பணியமர்த்தப்பட்டவுடன், அது நாட்டிற்கும் உலக அறிவியல் சகோதரத்துவத்திற்கும் ஒரு சொத்தாக இருக்கும் என நினைத்தேன். இந்த மகத்தான வெற்றிக்கு உதவிய வல்லுநர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஆதித்யா விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சூரிய தகடுகள் சரியாக வேலைசெய்யத் தொடங்கியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.