தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலைச் சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலை இன்று டெல்லியில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியுதவியைக் கோரினோம்.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ‘சென்னை துறைமுகத்தை மேம்படுத்துதல், சென்னை மெரினா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரியில் கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகள் அமைத்தல், சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்குதல், இராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே பன்னாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இராமேஸ்வரம் துறைமுக மேம்பாடு, கடலூர் பசுமைவள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு, பக்கிங்காம் கால்வாயைப் புனரமைத்தல் மற்றும் ஆழப்படுத்துதல், மேற்கு மற்றும் கிழக்குக் கடல் பகுதிகளை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டர் ஆழப்படுத்துதல்’ ஆகிய திட்டங்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கக் கோரினோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




