அதிமுக அலுவலகம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 450 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதிமுக பொதுக்குழு கடந்த 11ஆம் தேதி, நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியே போர்க்களம் போலக் காட்சி அளித்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘பள்ளி விடுதிகளில் கல்லூரி மாணவியருக்கு அனுமதி!’
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து கலவரத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களைக் கண்டுபிடிக்க இந்த தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 450 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், அவ்வை சண்முகம் சாலையைச் சுற்றிலும் 10 போலீஸ் வாகனங்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.








