தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. உதகை, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர்பவானி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தினமும் சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டதில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 13ஆம் தேதி (இன்று) ஒருநாள் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-ம.பவித்ரா








