நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பிரபல நடிகர் விவேக், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி மக்களை வலியுறுத்தி வந்தார். அது தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தடுப்பூசி செலுத்தி கொண்டார். தடுப்பூசிய செலுத்திய 2 நாட்களுக்குப் பிறகு அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை அனுமதித்தனர். ஆனால், அவர் மரணமடைந்தார். இது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தடுப்பூசி செலுத்தியதன் காரணமாகவே நடிகர் விவேக் மரணமடைந்த தாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்குத் தயங்கினர். ஆனால் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், விவேக்கின் மரணம் குறித்து, ஆய்வு நடத்திய மத்திய வல்லுநர் குழு, தடுப்பூசி காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என்றும் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பாலேயே அவர் மரணம் அடைந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.








