நடிகர் விஜயின் மகன் , மகள் பெயரில் போலியாக டிவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் , அவற்றை விஜய் ரசிகர்கள் யாரும் பின்தொடர வேண்டாம் எனவும் விஜய் சார்பில் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
திரைப்பிரபலங்களின் பெயரில் போலி டிவிட்டர் கணக்குகளை தொடங்கி பண மோசடியில் ஈடுபட முயல்வதும் , பொய்யான தகவல்களை பரப்புவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் நடிகர் சார்லி , செந்தில் உள்ளிட்டோரின் பெயரில் தொடங்கப்பட்ட போலி டிவிட்டர் கணக்குகள் குறித்து காவல் ஆணையரகத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாசா பெயரில் டிவிட்டரில் மர்ம நபர்கள் போலியாக கணக்கினை தொடங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தகவலை ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மூலம் அறிந்து கொண்ட நடிகர் விஜய் தனது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் மூலமாக தனது ரசிகர்களுக்கும் , மன்றத்தினருக்கும் போலி கணக்கு தொடர்பான தகவலை தெரியப்படுத்துமாறு கூறியுள்ளார்.
போலி அக்கவுண்ட் கிரியட்டர்களுக்கு பெரும்பாலும் வயதில் மூத்த நடிகர்களே இலக்காகி வந்த நிலையில் தற்போது விஜயின் மகன் , மகள் பெயரிலும் போலியாக டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்ட சம்பவம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







