தாய் பற்றி பேசி மேடையிலேயே அழுத நடிகர் சிவக்குமார்

அகரம் கல்வி அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில், தன்னை படிக்க வைக்க தனது தாய் பட்ட துன்பத்தைச் சொல்லி மேடையிலேயே அழுதுள்ளார் நடிகர் சிவக்குமார்.   நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலமாக ஏராளமான மாணவ,…

அகரம் கல்வி அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில், தன்னை படிக்க வைக்க தனது தாய் பட்ட துன்பத்தைச் சொல்லி மேடையிலேயே அழுதுள்ளார் நடிகர் சிவக்குமார்.  

நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலமாக ஏராளமான மாணவ, மாணவியருக்கு கல்வி சார்ந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஆண்டுதோறும் இங்கு படித்த ஏழை மாணவர்கள் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் அகரம் அறக்கட்டளையின் 44-வது விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மேலும் பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் சிவக்குமார் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும், அறக்கட்டளையின் மூலம் பயனடைந்த மாணவர்களும் பங்கேற்றனர்.

இதில் பேசிய நடிகர் சிவக்குமார் ”இந்த குழந்தைகளின் கதைகளை கேட்கும் போது நெஞ்சமெல்லாம் அடைக்கின்றது. உங்கள் அளவுக்கு சோதனையான வாழ்க்கை இல்லையென்றாலும், என்னுடைய வாழ்க்கையும் கிட்டதட்ட உங்களுடையது போன்றது தான். எனது அப்பா கருப்பா, செவப்பா-னு எனக்கு தெரியாது. நான் பிறந்து 10 மாதங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார். குடும்பத்த காப்பாத்த வேண்டிய அண்ணனும் எனக்கு 4 வயது இருக்கும்போது இறந்துவிட்டான். திரும்புகின்ற பக்கமெல்லாம் ஆலமரமும், எருக்கஞ்செடியுமா இருந்தது. எதுமே விளங்கவில்லை. மழையும் பெய்யவில்லை. புருசன் போயிட்டான், குடும்பத்த காப்பாத்த வேண்டிய பையன் போயிட்டான், என மனவேதனையில் அரலிக்கொட்டையை அரைச்சி எங்கம்மா ஆளுக்கொரு ஸ்பூன் கொடுத்து இருந்தா, எங்களது கதை 1941-லேயே முடிஞ்சி இருக்கும். அந்த பாவி மக விட்டுட்டு போனதால இன்னக்கி நான் இங்க நிற்கிறேன்” என  மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது அழுதார்.

 

தொடர்ந்து பேசிய சிவக்குமார் ”ஊரில் படித்தவர்கள் யாரும் கிடையாது, பள்ளிக்கூடமும் கிடையாது. தெருவில் இருந்து மண்ணை அள்ளி வந்து, பள்ளாங்குழியில போட்டு நிரப்பி அதில் தான் அ, ஆ, இ எழுதி பழகினேன். பிறகு கருங்கல்பட்டிக்கு வந்து முதல் வகுப்புக்கு, 1ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு 2 ரூபாயும், 3ம்வகுப்புக்கு 3.ரூபாயும், கொடுக்க வேண்டும். அந்த காலத்தில்  தங்கம் விலை 12 ரூபாய். எனது அக்கா மூன்றாம் வகுப்பும், நான் இரண்டாம் வகுப்பும் படித்தோம். அந்த காலத்தில்  3+2=5 கொடுத்தால் பாதி தங்கம் கிடைக்கும்.அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால் எனது அக்காவை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள்.

அதன் பிறகு நான் மட்டுமே பள்ளிக்கு சென்றேன். எனது சிறுவயதில்  கம்மஞ்சோறு, சோளச்சோறு தான் சாப்பிட்டு இருக்கேன். சுடு சோறு சாப்பிட்டதே இல்லை. தீபாவளி, பொங்கல் என எதையுமே கொண்டாடியதில்லை. போட்டுக்கொள்வதற்கு 2 சட்டை, 2 பேண்ட் மட்டும்தான் இருந்தது. மனம்நொந்து ஒரு நாள் அம்மாவிடம் நம்மால் ஏன் பொங்கச் சோறு சாப்பிட முடியவில்லை என கேட்டேன். பையன் தன்னை இப்படி  ஒரு கேள்வி கேட்டுவிட்டானே என, வெளியே சொல்லாமல் எங்கையோ சென்று கஷ்டபட்டு சம்பாதித்து, பள்ளிக்கூடம் போகும்போது மட்டும் ஒரு புடி சோறு மதிய சாப்பிட்டிற்கு கொடுத்து விட்டார். எனது அம்மா அழுது நான் பார்த்ததே இல்லை. ஒரு வேலை மனதிற்குள்ளேயே அழுது இருப்பார்.

அதன் பிறகு மேல்நிலை பள்ளியிலேயும் கட்டணம் கட்டி தான் படித்தேன், அப்போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்ய காமராஜர் இல்லை. மேல்நிலைப்பள்ளியில் 6,7,8, ஆம் வகுப்புக்கு இரண்டே முக்கால் ரூபாயும், 9,10,11,12 ஆம்  வகுப்புக்கு ஐந்தே முக்கால் ரூபாயும் கட்டணம் செலுத்தினேன். இவ்வாறு நான் படிப்பதற்கு மட்டும் ஆன செலவை நான் மொத்தமா கூட்டி பாக்கும் போது 750 ரூபாய் செலவாகி இருந்தது. 750 ரூபாய் செலவு செய்து படித்த சிவக்குமார் தான் தற்போது உங்கள் முன்னாடி நிற்கிறேன். தற்போது கார்த்தியின் குழந்தையை ப்ரிகேஜ் சேர்க்க இரண்டரை லட்சம் ரூபாய் கேட்கின்றனர். இதிலிருந்து  கல்வியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

– பரசுராமன்.ப  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.