சரத் பவாரை, அஜித் பவார் இன்று நேரில் சந்தித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய அஜித் பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
இதனையடுத்து அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக சரத்பவார் அறிவித்திருந்தார். தங்களுக்கு தான் எம்எல்ஏக்களின் ஆதரவு அதிகம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அஜித் பவார் உரிமையும் கோரியிருந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சரத் பவாரை அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது கட்சியில் பிளவு வேண்டாம் என்றும் ஒற்றுமையுடன் செயல்படலாம் என்று அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல், சரத் பவாரின் ஆசிர்வாதத்தைப் பெற வந்ததாக கூறினார். என்சிபி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பவாரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனை கேட்டுக்கொண்ட சரத் பவார் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறினார்.







