நடிகர் சிவாஜி கணேசன் உயில் விவகாரம்; விசாரணை தள்ளிவைப்பு

நடிகர் சிவாஜி கணேசன் 1999-ஆம் ஆண்டு எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் மரணத்திற்குப் பின், அவருக்குச் சொந்தமான…

நடிகர் சிவாஜி கணேசன் 1999-ஆம் ஆண்டு எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் மரணத்திற்குப் பின், அவருக்குச் சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், சொத்துக்களில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும், தங்களுக்கு உரியப் பங்கைப் பிரித்துத் தர உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துக்களிலும் சமபங்கு உள்ளதாகக் கூறி ராம்குமார், தங்களிடமும் (சாந்தி, ராஜ்வி), பிரபுவிடமும் 2013-ல் பொது அதிகார பத்திரத்தை எழுதிப் பெற்றதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘2,223 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!’

மேலும், 1999-இல் எழுதப்பட்டுப் பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021- இல் தான் வெளிவந்தது எனவும், அந்த சொத்தில் தங்களுக்கு உரிமையில்லை எனக் கூறப்பட்டுள்ளதாகவும், உயிலை மெய்ப்பித்து சான்று கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாகக் கூறப்படும் உயில் சோடிக்கப்பட்டது எனவும், அந்த உயில் சட்டப்படி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என வாதிடப்பட்டது.

பாகப் பிரிவினை கோரி கடந்த 2021- ஆம் ஆண்டு அனுப்பிய நோட்டீசுக்கு அவர் அளித்த பதிலில், தான் 1999- ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாக முதல் முறையாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.
சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 பங்குகளும், தாய் கமலாவின் 650 பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் கூறினார். வழக்கில் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பு வாதங்கள் முடிவடையாத நிலையில் விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.