மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66.
சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நேற்று நடைபெற்ற உலக சினிமா விழா துவக்க விழாவில் ஆர்.எஸ்.சிவாஜி பங்கேற்று இருந்தார். விழாவை முடித்து இல்லம் திரும்பிய அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகன் தான் ஆர். எஸ். சிவாஜி. பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி சகோதரர். லக்கி மேன், கோலமாவு கோகிலா, ஆபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 60க்கும் மேறப்பட்ட படங்களில் ஆர்.எஸ்.சிவாஜி நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த அதிக படங்களில் நடித்துள்ளார்.
அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் ஜனகராஜை பார்த்து அவர் பேசிய “சார்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்ற வசனம் மிகப்பிரபலம்.
இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
மறைந்த நடிகர் ஆர்.எஸ் சிவாஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது மகள் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு ஆர்.எஸ்.சிவாஜியின் உடலுக்கு திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.







