திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தார். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை முன்னறிவிப்பு எதுவும் இன்றி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதற்கிடையே ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியது.
இதனால் கோயிலுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அம்மன் சன்னதி அருகே ரஜினிகாந்த் இருப்பதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் அதிகரித்ததால் உடனடியாக அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இன்றுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை நகர பகுதியில் நிறைவடைவதையொட்டி ரஜினி கோயிலுக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது. அவர் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.







