நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்ட ‘கர்நாடக ரத்னா விருதை’ அவரது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாருக்கு அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வழங்கினார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அப்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் 45 வயதில் உயிரிழந்தது கன்னட திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகராக மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் ஈடுபட்டதால் கன்னட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புனித் ராஜ்குமார்.
அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை வழங்க வேண்டும் என ரசிகர்கள் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றார். அவரை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார்.
இதையடுத்து, விழாவில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவரும் சகோதரர்களாக, சாதி மத பேதமின்றி, ஒன்றாக சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும் என ராஜ ராஜேஷ்வரி, அல்லா, ஜீசசை வேண்டிகொள்கிறேன் என்றார்.
-இரா.நம்பிராஜன்








