பிரபல ஹாலிவுட் நடிகை லிசா பனேஸ் இருசக்கர வாகனம் மோதியில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை லிசா பனேஸ் (வயது 65). 1980 களில் முன்னணி நடிகையாக இருந்த இவர், கான் கேர்ள் (Gone Girl), ஃபிரீடம் ரைட்டர்ஸ், பிராத்தல், வித்தவுட் லிமிட்ஸ், டாம் குரூஸின் காக்டெயில் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பள்ளி ஒன்றுக்கு செல்ல இருந்த லிசா பனேஸ், அதற்காக லிங்கன் சென்டர் அருகே அவர் சாலையை கடந்தார். அப்போது, வேகமாக வந்த மோட்டர் பைக் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து பைக்கில் வந்தவர் நிற்காமல் சென்றுவிட்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மருத்துவ மனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் லிசா பனேஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.







