தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் ஆவர். திரையரங்குகளில் இவர்களது திரைப்படங்கள் வெளியாகினால் அவை திருவிழா போல ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. மேலும் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளனர்.
புதுப்படங்கள் வெளியீடு, வசூல் விவரங்கள், பேனர்கள் வைப்பது உள்ளிட்டவை தொடர்பாக இரு நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது இணையத்தில் மோதிக்கொள்வது வழக்கம். சில நேரங்களில் இந்த மோதல்கள் பொது இடங்களிலும் நிகழ்வது உண்டு.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் காலமாகி இருப்பதால் பல்வேறு நடிகர்களின் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் படி இன்று அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் கில்லி திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை ரோகினி திரையங்கில் ’கில்லி’ மற்றும் ’துணிவு’ படம் பார்க்க வந்த ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் கில்லி படம் வெளியாகியுள்ள திரைக்கு சென்று ’கடவுளே அஜித்தே’ என்று கூச்சலிட்டுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்களும் பதிலுக்கு ’தளபதி’ என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி கோஷம் எழுப்பி வந்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வைத்தனர். இது தொடர்பான காணொலிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.







