சர்ச்சை பதிவால் கைதாகி சிறையில அடைக்கப்பட்டிருக்கிறார் ஒரு நடிகர். யார் அந்த நடிகர்? அவர் பதிவிட்ட சர்ச்சை கருத்து என்ன? விரிவா பார்க்கலாம்.
கன்னட திரைப்பட நடிகர் சேத்தன் குமார். ‘ஆ தினகலு’, ‘பிருகாளி’, ‘ரணம்’ எனப் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் சேத்தன் குமார். நடிகராக மட்டுமில்லாமல் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள சில பதிவுகள் சர்ச்சையாகி அதன் காரணமாக அவர் கைதான சம்பவமும் நடந்துள்ளது. முன்னதாக ஹிஜாப் வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ட்வீட் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இதன் பிறகு காந்தாரா படத்தைப் பற்றியும், பழங்குடியினர் குறித்தும் நடிகர் சேத்தன் குமாரை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் இந்துத்துவா குறித்து நடிகர் சேத்தன் குமார் சர்ச்சையாக மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்துத்துவா குறித்து கன்னடத்தில் நடிகர் சேத்தன் குமார் பதிவிட்ட டுவிட்டர் பதிவால் சர்ச்சை கிளம்பி உள்ளது.
இந்த பதிவிற்கு இந்து ஆதரவு அமைப்புகள் நடிகர் சேத்தன் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத உணர்வை புண்படுத்தியதாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு ஷேஷாத்ரிபுரம் போலீசார் நடிகர் சேத்தன் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிறகு அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
திரையுலக அடையாளத்தை கடந்து தன்னை ஒரு சமூக ஆர்வலராக காட்டிக் கொள்ளும் சேத்தன் குமார் உலகில் நடக்கும் சம்பவங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இதனால் அவரது கருத்துகள் பலமுறை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.










