பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி. தினகரன் தரப்புக்காக, தேர்தல்ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் அவர் காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி இருப்பதாகவும் அதில் ரூ.52 லட்சம் மதிப்பிலான குதிரை, 9 லட்சம் மதிப்பிலான 4 பெர்சியன் பூனைகளும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக மற்றொரு பாலிவுட் நடிகை நோரா பதேஹிக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் விலை உயர்ந்த ஐபோன் ஒன்றையும் சுகேஷ் பரிசளித்தாராம்.
இதையடுத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், துபாய் செல்வதற்காக, நடிகை ஜாக்குலின் நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், லுக் அவுட் நோட்டீஸ் பற்றி கூறினர். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.









