நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் கலவையான வரவேற்பை பெற்றது. இவர் தற்போது 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் நடிகர் தனுஷ் இயக்குகிறார்.
இதையும் படியுங்கள் : சர்ச்சையை கிளப்பிய ‘Pure Veg Fleet’: திரும்பப் பெற்றது சொமேட்டோ!
‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் முலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இசை உலகின் ராஜா என பெயர் எடுத்தவர் இளையராஜா. 1400 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் இன்றும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாகவும் அதில் தனுஷ் நடிப்பதாகவும் நீண்டகாலமாகவே சினிமா வட்டராங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உண்மையாகி உள்ளது. நேற்று ( மார்ச் – 20 ) தனுஷ், “கிடாரின் பின்னணியில் காவிய பயணம் துவங்குகிறது” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிக்க உள்ள இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைபடத்தின் பூஜை மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ், கங்கை அமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கூறியதாவது :
“எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நான் ரொம்ப நம்புகிறேன். இரவில் தூக்கம் இல்லையென்றால் இளையராஜாவின் பாட்டு கேட்டுவிட்டு மெய்மறந்து தூங்கலாம். ஆனால், நான் பல இரவு இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்து நினைத்து தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறேன். நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதில் ஒன்று இசைஞானி அது நடந்து விட்டது. இன்னொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன்” இவ்வாறு நடிகர் தனுஷ் தெரிவித்தார்.








