இயக்குனர் பாரதிராஜா 1990ம் ஆண்டு இயக்கிய படம் ‘என் உயிர்த் தோழன்’. இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு கங்கை அமரன் பாடல்கள் எழுதியிருந்தார்.
இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாபு. முதல் படத்திலயே தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும், நடிகர் பாபுவுக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்தன. நிறைய தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து அவரை ஹீரோவாக புக் செய்தனர்.
பாபுவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்
தொடர்ந்து பிசியாக நடித்து வந்த பாபு “மனசார வாழ்த்துங்களேன்” எனும் படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியில் இருந்து குதித்த போது அவருக்கு முதுகில் பலமாக அடிப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினாலும், அதன்பிறகு பாபுவால் எழுந்து நடக்கவே முடியவில்லை.
கடந்த 20 வருடமாக படுத்த படுக்கையாகவே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிய நேரில் சென்ற இயக்குனர் பாரதிராஜா, பாபுவின் நிலையைக் கண்டு கண்கலங்கி போன வீடியோ வெளியாகி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமாகி சினிமாவில் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நடிகர் பாபு, இன்று படுத்த படுக்கையாக இருக்கும் காட்சி காண்போரை கலங்கச் செய்கிறது.








