பத்தாம் வகுப்பு மாணவனை அடிப்பேன் என்று கூறியது, கோபத்தில் வந்த வார்த்தை என்று நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் முகேஷ். 250-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், தமிழில், மனைவி ஒரு மாணிக்கம், ஜாதிமல்லி, சுந்தர்.சியின் ஐந்தாம்படை உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன், பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் முகேஷுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். முகேஷ் போனை எடுத்தபோது, தனது நண்பர் ஒருவர் போன் நம்பரை கொடுத்ததாகக் கூறியுள்ளான் மாணவன். நண்பனின் முகத்தில் அறைய வேண்டும் என்று கூறிய முகேஷ், தற்போது நீ என் முன்னால் நின்றால் கம்பால் அடிப்பேன் என்று கோபமாகத் திட்டியுள்ளார்.
நடிகர் முகேஷ், போனில் பேசிய இந்தப் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. இது பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏவாக இருந்துகொண்டு பள்ளி மாணவனிடம் அவர் இப்படி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில் இதற்கு நடிகர் முகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், தேர்தல் முடிந்ததில் இருந்து தொடர்ந்து எனக்கு போன் அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்குள் என் தொலைபேசி சார்ஜ் இறங்கிவிடுகிறது. சிலர் மின்சாரம் வரவில்லை என்கிறார்கள், சிலர் ரயில்கள் நேரமாகி வருகின்றன என்கிறார்கள். இது வேண்டுமென்றே, எனக்கு தொல்லைக் கொடுப்பதற்காக வரும் அழைப்புகள் என்று தெரியும். இதன் மூலம் என் ஆத்திரத்தை தூண்ட நினைக்கிறார்கள். ஆனால் இதுவரை அதை நிறைவேற்ற முடியவில்லை.
அந்த மாணவன், நான் ஜூம் மீட்டிங்கில் இருந்தபோது பேசினான். அவனிடம் அதை தெரிவித்தபோதும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான். அதனால் கோபத்தில் அப்படி சொன்னேன். அதற்காக மாணவனை அடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இதற்கு பின்னால் அரசியல் சதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.







