அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல ரூ.44.56 லட்சம் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி உள்பட மூவரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், இரு அமைச்சர்கள் மீதான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கு விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை என்று நீதிபதி கூறினார். அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகள் ஒரே மாதிரியாக இருப்பதாக கூறிய நீதிபதி, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் இந்த வழக்குகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டார்.
நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், இந்த நீதிமன்றம் நாட்டில் வாழும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது என்றார். யார் ஆட்சிக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர் என்றும், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி….
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாட்டில் மாற்றத்தை காண முடிகிறது என்று கூறிய நீதிபதி, இவற்றை தெரிந்து கொண்ட பிறகும் கண்ணை மூடிக் கொண்டிருந்தால் கடமையை செய்ய தவறியவனாகி விடுவேன் என குறிப்பிட்டார். தீர்ப்புகளுக்கு ஒரு Format-ஐ வைத்துக் கொண்டு, தேதியை மட்டும் மாற்றம் செய்து விடுதலை என்று தீர்ப்பு கூறி விட்டார்கள் என்று கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை என்று கூறினார்.
அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரித்து, கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோர் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.







