கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்துள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இத்திரைப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ‘சர்தார் 2’ திரைப்படத்தின் பணிகள் ஜுலை 12ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. ‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள் : ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து – 13இந்தியர்கள் உட்பட 16பேர் மாயம்!
இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சாலிகிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது.
பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.








