“பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” – பிரேமலதா!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு பக்கம் விலை உயர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில், மறுபக்கம் டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களில் தட்டுப்பாடு நிலவுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், மக்களின் இயல்பான வாழ்க்கை முறையும், அன்றாட வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு “லாக்டவுன்” போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பது உறுதி என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் உள்ளனர். உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற பழமொழிக்கிணங்க, ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மற்றும் மற்றொரு பக்கம் தட்டுப்பாடு ஆகிய இரட்டை சுமைகள் மக்களின் வாழ்வை பெரிதும் சிரமப்படுத்தி வருகின்றன. இந்த நிலை மக்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டையும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைகள் பாதிக்கப்படாத வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தீர்வுகளை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் மீது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சுமையை நிரந்தரமாக குறைக்கும் வகையில் அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.