அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் விஜய்யின் ’குஷி’படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து ’நியூ’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் கடைசியாக 2015-இல் இசை என்ற படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பின் கில்லர் என்ற புதிய படத்தை இயக்குகிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டே இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், இன்று சென்னை பெரம்பூர் பின்னி மில்லில் நடைபெற்று வந்த ‘கில்லர்’ படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மதன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..







