நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் அதிமுக 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதால் அதிமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டது. இதனிடையே சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக தகுதி நீக்க புகாரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்தார்.
இதனிடையே மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தநிலையில், அவர்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற உத்தரவு செல்லும் என்றும், எம்.எல்.ஏ.க்களின் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதால் ராஜினாமாவை ஏற்க தடை இல்லை என்றும், தகுதி நீக்க நடவடிக்கை குறித்து சபாநாயகர் 2 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.




