மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்துள்ளது. இந்த சூழலில் முன்னாள் மே. வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான அபிஷேக் பானர்ஜி மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது வெறும் ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; அது அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மீதும், நமது பொதுவான மரபாகத் திகழும் ஜனநாயகம் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். இதுவே, பாஜகவின் பழிவாங்கும் அரசியலின் கோர முகமாகும். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து அபிஷேக் பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ராகுல் ஜி, உங்கள் அக்கறைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி. இந்தியாவின் ஆன்மாவைக் காக்கவும், அதன் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கவும், நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள விழுமியங்களை நிலைநிறுத்தவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியுடன் போராடி வருகிறோம்.
தேசியத்தின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியல் வன்முறைக்கும், அரசால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்திற்கும் பலியான ஒருவராக நான் நிற்கிறேன். ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும், நமது தேசத்தைப் பிளவுபடுத்தவும் முயலும் சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.
‘இந்தியா’ (INDIA) ஒன்றுபட்டு நிற்கிறது; அச்சம், வெறுப்பு, வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சார்ந்த அரசியல் தோற்கடிக்கப்படுவதையும், மக்களின் குரலே இறுதியில் வெல்வதையும் நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்ஜேடிவின் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி ஆகியோருக்கும் அபிஷேக் பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.







