முக்கியச் செய்திகள்

வங்கிகளில் வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகளில் தமிழ் தெரியாத பிறமாநிலத்தவரை அதிக அளவில் பணியமர்த்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. மக்கள் சேவைத் துறைகளில் தமிழ் தெரியாதவர்களை வேண்டும் என்றே பணி நியமனம் செய்யும் இந்திய ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை அசோக் நகரில், காவலர் பயற்சிக் கல்லூரி எதிரேயுள்ள ‘இந்தியன் ஓவர்சீஸ்’ பொதுத் துறை வங்கியில் தொடர்ந்து தமிழ் தெரியாத பிற மாநில அதிகாரிகளே மேலாளர்களாக நியமிக்கப்படுவதால் வங்கி சேவையைப் பெறுவதில் அடித்தட்டு, ஏழை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இந்தி தெரியாத பாமர தமிழர்களை, வடநாட்டு அதிகாரிகள் ஆணவத்தோடு, அவமதிக்கும் நிகழ்வுகள் தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மிகுந்த ஆத்திரத்தையும், கோவத்தையும் ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சிறுகடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வகையான கூலித்தொழில்கள் என எல்லா பணிவாய்ப்புகளும் லட்சக்கணக்கில் வடமாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள என்.எல்.சி, எல்.ஐ.சி, பி.எச்.இ.எல் உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவரே பல்லாயிரக்கணக்கில் பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். மேலும் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் வடமாநிலத்தவரே நியமிக்கப்படுகின்றனர்.

இதனால் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோவதோடு, தமிழர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பொருளாதாரமும் கொள்ளைபோகிறது. மேலும் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற குறைந்தபட்ச ஊதிய உரிமையும் பறிபோய் வர்க்க பாகுபாட்டில் தமிழ்நாடு பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அவலச்சூழலும் ஏற்படுகிறது. குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 8 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு லட்சக்கணக்கில் பலமடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பணிபுரிய தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருப்பது கட்டாயம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டின் தன்னாட்சி, இறையாண்மை மற்றும் தமிழர்களின் வாழ்வுரிமையை அழித்தொழிக்கும் வடவர் திணிப்பைக் கட்டுப்படுத்த நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முழுவீச்சில் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

Web Editor

ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Jayasheeba

மும்பை டெஸ்ட்: பிறந்த மண்ணில் 10 விக்கெட் அள்ளி அஜாஸ் சாதனை!

Halley Karthik