திண்டுக்கல் அருகே ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சியில் நின்று புகைப்படம் எடுத்த இளைஞர் தவறி விழுந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நீரோடைகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் (வயது 28) என்ற இளைஞர், பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
பின்னர் அங்கு நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது புல்லாவெளி அருவியில் உள்ள பாறை சரிவுகளில் ஆபத்தான முறையில் அஜய் பாண்டியன் நின்று புகைப்படம் எடுத்த போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இளைஞரை தேடும் பணி சிரமமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அஜய் பாண்டியன் புகைப்படம் எடுத்து கொண்டதும், அவர் அருவியில் தவறி விழுந்த காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. அருவிகளில் குளிக்க செல்வோர் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்வோர் பாதுகாப்பான முறையில் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
– இரா.நம்பிராஜன்









