தமிழை உலகமெங்கும் கொண்டு செல்லும் பணியில் ஒரு பகுதியாக தமிழில் உள்ள நல்ல நூல்களை பல்வேறு மொழிகளில் ஒலி-ஒளி சித்திரமாக மாற்றும் முயற்சியில் சென்னை பல்கலை கழகம் இறங்கியுள்ளது.
தமிழின் புகழை உலக அரங்கில் தூக்கி நிறுத்தும் நூல்களுள் ஒன்றான அவ்வையாரின் ஆத்தி சூடியை அரேபிய மொழியில் ஒலி-ஒளி சித்திரமாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அரேபிய மொழியில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், ஆங்கில மொழியில் சப்-டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்கலைகழக துணை வேந்தர் கெளரி, நாங்கள் திருக்குறளை அரேபிய மொழியில் மொழிபெயர்த்தோம். அதற்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே ஆத்திசூடியை மொழிப்பெயர்ப்பு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது என்றார்.
மேலும், நாங்கள் பாரதியாரின் பாடல்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவுள்ளோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன எனக்கூறினார்.
மொழி பெயர்க்கப்பட்ட ஆத்திசூடி வீடியோவை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும், ஆளுநர் ரவிக்கும் போட்டு காண்பித்துள்ளனர். அவர்கள் இருவரும் இவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
அரபியதுறை சார்பில் தமிழில் உள்ள தலைசிறந்த நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருவதால் வளைகுடா நாடுகளில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வமும், தமிழ் இலக்கியங்கள் மீது தீராத காதலும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.








