சமூக வலைதளமான ட்விட்டரில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கையில் 20% முதல் 50% வரை போலி கணக்குகள் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க சில வாரங்களுக்கு முன்பு விருப்பம் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் பங்குகளை எலான் மஸ்க் வாங்குவதை தடுக்க முதலில் ட்விட்டர் நிறுவனம் முயன்றது. எனினும், பின்னர் அந்த முடிவை ட்விட்டர் கைவிட்டது.
இதனால், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான பணிகள் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ட்விட்டரில் கணக்கு வைத்திருப்போர் தொடர்பாக அந்நிறுவனம் தெரிவிக்கும் எண்ணிக்கை உண்மையானது அல்ல என கூறி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய எலான் மஸ்க், அதில் 20% முதல் 50% வரை போலிகள் என குற்றம் சாட்டி இருந்தார்.
இது குறித்து ட்விட்டர் நிறுவனம் உண்மையை கூறினால் மட்டுமே, அதனை வாங்குவதற்கான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும் என கூறி உள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால், ட்விட்டரில் போலி கணக்குகள் 5%-க்குள் மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தரவுகள் உண்மையானவை என கூறியுள்ள அவர், அதேநேரத்தில், ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை பொதுவெளியில் பகிர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பாக வெளியில் இருந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உண்மையானதாக இருக்க முடியாது என்றும் பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய தரவுகள் பலவற்றை எலான் மஸ்க்குடன் தாங்கள் பகிர்ந்து கொண்டதாகவும், அவருடன் தொடர்ந்து உரையாட ஆவலுடன் இருப்பதாகவும் பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில், ட்விட்டர் நிறுவனத்தின் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும், தங்கள் குழு இதற்காக முழு மூச்சுடன் எப்போதும்போல் செயல்பட்டு வருவதாகவும் பராக் அகர்வால் கூறியுள்ளார்.
இதனிடையே, டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 20% கணக்குகள் போலி எனும்போது, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முன்பு அறிவித்தவாறு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவது மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளது.










