டெல்லியில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் புத்த மதத்திற்கு மாறினர். அப்போது, இந்து மதத்தை பின்பற்ற மாட்டோம். இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. அவர்களுடன் டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தின. தேர்தல் பிரசாரத்திற்காக குஜராத் சென்றிருந்த முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அங்கு எதிர்ப்புகிளம்பியது. மேலும், வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் திரங்கா பேரணியின் போது அக்கட்சியின் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இன்று மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள் மற்றும் மான்யவர் கன்ஷி ராம் சாஹேப் அவர்களின் நினைவு நாள். அப்படியொரு நாளில், தற்செயலாக இன்று நான் பல தடைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். இன்று நான் மீண்டும் பிறந்துள்ளேன். இப்போது, நான் இன்னும் உறுதியாக, சமூகத்தின் மீதான உரிமைகளுக்காக மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக எந்த தடையுமின்றி உறுதியாக தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.