டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7-ல் ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து, ஆம் ஆத்மி தலைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து, ஆம் ஆத்மி தலைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே மார்ச் 31 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி,  திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன்,  அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட அமலாக்கத்துறை காவல் ஏப். 1 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில்,  அவருக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து, ஆம் ஆத்மி தலைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  அதன்படி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 7 ஆம் தேதி,  காலை 11 மணிக்கு அனைத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், “சர்வாதிகார சக்திகளுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக போராடி வருகிறார்.  இந்தப் போராட்டத்தில் நாடு அவர்களுடன் நிற்கிறது என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அவருக்காக உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் செய்ய வேண்டும்” என ஆம் ஆத்மி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.