ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி. சூரியன்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். பொதுவாகவே ஆடி மாதத்தை ஆன்மிக மாதமாகவே கடைப்பிடிப்பது வழக்கம். இந்த மாதம் முழுவதுமே அம்மன் வழிபாடு அனைத்து ஆலயங்களிலும் களைகட்டும். ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என்று பல விழாக்கள் கொண்டாடப்படும். இவை தவிர அனைவரது வீடுகளிலும் அம்மனுக்குக் கூழ்வார்த்து வழிபாடு செய்வதும் இந்த மாதத்தில்தான்.

இப்படிப்பட்ட புனிதமான மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில், ஆடி அமாவாசை, இந்த முறை ஜூலை 17 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய இரண்டு நாட்களில் வருகிறது. இதுபோன்று இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தை அதிக மாதம் என்பார்கள். அதிக மாதங்கள் அனைத்துமே முன்னோர்கள் வழிபாட்டுக்கானவை. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.

ஆடி அமாவாசை நாளில், அதிகாலையிலேயே எழுந்து, காலையில் வழக்கம் போல் செய்ய வேண்டிய வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவர். அதாவது இம்மண்ணுலகை விட்டு சென்ற தன் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி, யாருமில்லாமல் ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்று நாடு முழுவதிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீராமன் சிவனை வழிபட்டு பாவம் விமோட்சனம் பெற்ற ஸ்தலம் என்பதால் இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற கோயிலாக உள்ள இக்கோயிளுக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாயள அமாவாசை போன்ற முக்கிய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வழிபடுவர்.

அதன்படி , ஆடி அமாவாசையையொட்டி நேற்று முதல் ராமேஸ்வரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். தங்களது முன்னோா்களுக்கு அக்னி தீர்த்த கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் நின்று கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடினார். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பக்தர்கள் இடையூறு இன்றி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையர் கண்ணன் தலைமையில் 160-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுகாதார பணி மற்றும் குடிநீர் வசதிகள் செய்திருந்தனர். காவல்துறை சார்பில் கூடுதல் கண்காணிப்பாளர் அருண் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம், சேதுக்கரை,தேவிபட்டணம் பகுதியில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம்,தேவிபட்டணம்,சேதுக்கரை உள்ளிட்ட புனித ஸ்தலங்கள் இருக்கும் பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.