மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜகிஸ் என்பவர் மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு மாசி வீதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தரைத்தளத்தில் கடையும் மேல்தளத்தில் குடோனும் உள்ளன.
இந்த கடையில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. இதனையடுத்து திடீர் நகர், அனுப்பானடி, தல்லாகுளம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்த 5 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.தீ விபத்து காரணமாக தெற்கு மாசி வீதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மாநகராட்சி சார்பாக பழமையான கட்டடங்கள் கண்டறியப்பட்டு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.






