சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முத்துகிருஷ்ணன் (24) . இவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர். முத்துகிருஷ்ணன் நேற்றிரவு 11.30 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில், காசி திரையரங்கம் அருகில் உள்ள கடையில் ஜூஸ் குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது மழைநீர் வடிகால் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரவு ஒரு மணி அளவில் அந்த வழியே சென்ற காவலர் ஒருவர் அவருக்கு உதவி செய்து தரமணி அருகே உள்ள கந்தன் சாவடியில் உள்ள அவரது இல்லத்திற்கு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் இருந்த நண்பர்கள் அவரை முதலுதவிக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுய நினைவை இழந்த முத்துக்கிருஷ்ணனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் வந்து மருத்துவர்களை சந்தித்து
அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். முத்துகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







