பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை மர்மநபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் 52 வயது நிரம்பிய தமிழ்செல்வி என்பவர், நேற்றிரவு ரயிலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அங்கிருந்த மர்ம நபர் தமிழ்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் காயமுற்ற பெண்ணை மீட்ட ரயில்வே போலீசார், அவரை தாம்பரம் பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 13 தையல்கள் போடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை முடிந்து தமிழ்செல்வி வீடு திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்ததற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.







