‘என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்…’ – விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

மதுரையில் விஜய் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் விதமாக ஒட்டிய போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் சில காலங்களாகவே பேசுபொருளாக இருப்பது சூப்பர்ஸ்டார் பட்டம் சர்ச்சை. இந்த…

மதுரையில் விஜய் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் விதமாக ஒட்டிய போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் சில காலங்களாகவே பேசுபொருளாக இருப்பது சூப்பர்ஸ்டார் பட்டம் சர்ச்சை. இந்த பட்டத்தினை நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக தனது வசமே தக்க வைத்திருந்தார். அந்த பட்டத்துக்கு வேறு பல பட்டத்திற்கு சொந்தமான நடிகர்கள் நேராகவும், மறைமுகமாவும் போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விஜய்யும் போட்டியில் குதித்துள்ளது ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்டதே. ஆனால் அதுதான் தற்போதைய தமிழ் சினிமாவின் பரபரப்புக்கு காரணம். விஜய்  இதுகுறித்து நேரடியாக சொல்லாவிட்டாலும், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தன்னை சூப்பர்ஸ்டார் என புகழ்ந்தபோது அமைதி காத்து வந்ததே அவருக்குள் இருக்கும் ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக பேசப்பட்டது.

இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகூம் பாடல் அமைந்திருந்ததாக ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஹூக்கும்’  பாடலில் “உங்கப்பன் விசில கேட்டவன்… பட்டத்த பறிக்க நூறு பேரு” உள்ளிட்ட அட்டாக் வரிகள் இடம்பெற்ற நிலையில், விஜய் ரசிகர்கள் மேலும் இணையத்தில் கொந்தளிக்கத் தொடங்கினர்.

இந்த வரிகள் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படும் நடிகர்களுக்கு ரஜினி கொடுத்த எச்சரிக்கை போலவே பார்க்கப்பட்டது. இதுமட்டுமின்றி, ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது. சூப்பர்ஸ்டார் பட்டம் எப்பவுமே தலைவலிதான் என கூறி, அவர் காக்கா, பருந்து கதை ஒன்றை சொல்லி இருந்தார். இதில் அவரை பருந்து போலவும், விஜய்யை காக்கா என சித்தரித்து தான் ரஜினி இந்த கதையை சொன்னதாக சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகரமாகவும் வெடித்தது. இதுதொடர்பாக ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த சர்ச்சை தற்போது வரை நீடித்தும் வருகிறது. ஜெயிலர் இணையத்தில் ட்ரெண்டாகும் நேரங்களில் அப்டேட்டே இல்லாமல் விஜய்யின் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ரஜினியின் பேச்சுக்கு விஜய் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

https://twitter.com/news7tamil/status/1688075706822180864

இந்நிலையில் விஜய் மெளனமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் ரஜினியையும், அவரது ரசிகர்களையும் நேராகவோ, மறைமுகமாகவோ சீண்டிக்கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் மதுரையை சேர்ந்த ‘மதுரை மண்ணின் மைந்தன் விஜய் அண்ணா வெறியர்கள்’ ஒட்டியுள்ள போஸ்டர் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில், ‘என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’ என குறிப்பிட்டு விஜய் மற்றும் ரஜினியின் புகைப்படங்களை போட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் டுவிட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.