ஒரே நாளில் காவல்துறையை சேந்த 3 பேர் தனக்கு தானே உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளனர். மதுரையை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் 12ம் அணி பட்டாலியனாக பணியாற்றி வந்தார். தமிழ் செல்வனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இருந்ததாகவும், தொடர்ச்சியாக மன உளைச்சலில் இருந்துவந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர் தனது அறையில் யாருமில்லாத நேரத்தில் உடலில் மண் எண்ணையை உற்றி தீக்குளித்து உயிரைமாய்த்து கொள்ள முயன்றார். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேபோல் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதியான ராஜேஸ்வரனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். சுற்றுலா சென்ற ராஜேஸ்வரன் பழையகுற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க சென்ற பார்த்திபனும் அங்கிருக்கும் மற்றொரு அறையில் தங்கியிருந்தார்.
இரவு நேரத்தில் விடுதியில் இருக்கும் அவரது அறையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர், அவரது அறையை திறந்து பார்த்தபோது, பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் பார்த்திபன் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற குற்றாலம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பார்த்திபன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அதனால் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர் குடும்பத்தாரிடம் விசாரணை செய்யப்படும் எனவும் காவல்துறையின் தரப்பில் கூறப்படுகிறது.
அதே போல சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகர் ஒ’பிளாக் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரபு எஸ்ஸோ தம்பதி. இவர்களுக்கு கிஷ்கிதா என்ற மகளும் இருக்கினறார். ஆயுதபடை காவலராக இருந்த பிரபு, மகிஷ்னர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் பணிமுடிந்து வீடு திரும்பிய பிரபு மனைவியிடம் வெளியில் செல்வதாக கூறிச்சென்று, நள்ளிரவு 12 மணியளவில் மதுபோதையில் வீடு திரும்பியிருக்கிறார். பிரபுவின் மனைவியோ திருமண நிகழ்விற்காக செல்ல வேண்டும் என வெகு நேரமாக கணவனின் வருகைக்காக காத்திருந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
கொஞ்ச நேரத்திலேயே மனைவியும், குழந்தையும் வெளி அறையில் படுத்து தூங்கிவிட்டனர். சிறிது நேரம் கழித்து பிரபுவின் மனைவி தூக்கலிருந்து எழுந்து படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது பிரபு மின்விசிறியில் தூக்கிட்டு உயிரைமாய்த்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபு உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது வேறு ஏதாவது பிர்சனையா என விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
ஒரே நாளில் காவல்துறையை சேர்ந்த மூவர் உயிரை மாய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.







